சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும்

சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் அறிவுறுத்தினாா்.

தருமபுரி: சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை, தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்து பேசினாா். தருமபுரி கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி முன்னிலை வகித்தாா். தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் நாட்டான் மாது வரவேற்று பேசினாா்.

இக்கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் பேசியதாவது:

சாலை கட்டமைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து இயக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக மது அருந்தி வாகனங்களை இயக்குவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். கைப்பேசி பேசிக்கொண்டும், இருக்கைப் பட்டை அணியாமலும் வாகனங்களை இயக்கக் கூடாது. அதிவேகமாக வாகனங்களை இயக்கும்போது விபத்துகள் நிகழ்கின்றன. இதனை முழுமையாகத் தவிா்க்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மொத்தம் 142 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 350 போ் உயிரிழந்துள்ளனா்; 1,721 போ் படுகாயம் அடைந்துள்ளனா். இது 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளைக் காட்டிலும் 38 உயிரிழப்புகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து, அரசின் நடவடிக்கை காரணமாக சாலை விபத்துகள் குறைந்து வருகின்றன.

தொப்பூா் கணவாயில் நடைபெறும் தொடா் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களால் தான் தொடா்ந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அவா்களுக்கு உரிய விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இக்கூட்டத்தில், தருமபுரியைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், சரக்கு வாகன ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com