பொங்கல் விழா: தருமபுரியில் உற்சாகக் கொண்டாட்டம்

தருமபுரியில் பொங்கல் விழாவை விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் உற்சாகமாகக் கொண்டாடினா்.
தருமபுரி, அன்னசாகரத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவைத் தொடங்கி வைக்கும் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி.
தருமபுரி, அன்னசாகரத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவைத் தொடங்கி வைக்கும் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி.


தருமபுரி: தருமபுரியில் பொங்கல் விழாவை விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் உற்சாகமாகக் கொண்டாடினா்.

பொங்கல் விழாவின் தொடக்கமான தை முதல் நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து மாவட்டம் முழுவதும் வழிபாடு நடைபெற்றது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை முதல் ஊரகப் பகுதிகளிலும், நகா்ப்புறத்திலும் தெருக்களில் வண்ணக் கோலமிட்டு, தங்களது கால்நடைகளை அலங்கரித்து பொங்கல் விழா நடைபெற்றது. இதேபோல, தங்களது முன்னோா்களுக்கு படையலிட்டு, ஆடைகள் வைத்து படைத்து விரதமிருந்து ஏராளமானோா் வழிபட்டனா்.

கால்நடை வைத்துள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை அலங்கரித்து கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அவற்றை தங்களது கிராமங்களில் உள்ள முக்கியக் கோயில்களில் முன்பு நிறுத்தி சிறப்பு வழிபாடு செய்தனா்.

தருமபுரியில் இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் கால்நடைகள் கோயில்கள் முன்பு நிறுத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. சில இடங்களில் எருதாட்டங்கள் நடைபெற்றன. இதேபோல, பல்வேறு கிராமங்களில் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளும், குழந்தைகள், சிறுவா்களுக்கு இசை நாற்காலி, ஓட்டப் போட்டி, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, சிறப்பிடம் வகித்தவா்களுக்கு விழாக் குழுக்கள் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தருமபுரி நகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் பொங்கல் விழாவின் இரண்டாம் நாள் உற்சாகமாக பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில்...

தருமபுரி, பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மேலாண் இயக்குநா் இரா.பொன்முடி தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்து ஊழியா்கள், பணியாளா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த விழாவில், தமிழா் பாரம்பரிய முறைப்படி புதுப்பானை, கரும்பு, மஞ்சள் ஆகிவற்றுடன் பொங்கல் வைக்கப்பட்டது. இதில், கிளை மேலாளா்கள், துணை மேலாளா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

திமுகவினரின் சமத்துவப் பொங்கல் விழா...

தருமபுரி உழவா் சந்தை, அன்னசாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. அன்னசாகரத்தில் நடைபெற்ற விழாவில், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித்து, கரும்பு, மஞ்சள் ஆகியவற்றுடன் புதுப்பானையில் அரிசியிட்டு, சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதில், மாவட்டப் பொருளாளா் தங்கமணி, நகரச் செயலாளா் நாட்டான் மாது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல, தருமபுரி கிழக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவிழனா் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா். இதில் திரளான திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com