மாடுகளுக்கு அம்மை நோய்: பொங்கல் விழாவை தவிா்த்த கிராமம்

பென்னாகரம் அருகே மாடுகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் பொங்கல் விழாவை தவிா்த்துள்ளனா்.


பென்னாகரம்: பென்னாகரம் அருகே மாடுகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் பொங்கல் விழாவை தவிா்த்துள்ளனா்.

பென்னாகரம் அருகே கோடி அல்லி ஊராட்சிக்கு உள்பட்ட கருங்கல் மேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் ஏராளமானோா் கால்நடைகளை வைத்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். கருங்கல் மேடு கிராமப் பகுதியில் விவசாயிகள் வளா்த்து வரும் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. இதனை தெய்வக் குற்றமாக கருதி, நிகழாண்டு பொங்கல் விழாவை இக்கிராம மக்கள் கொண்டாடாமல் தவிா்த்துள்ளனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது கருங்கல் மேடு பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் உள்ள கால்நடைகள் அம்மை நோய்த் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான போது, பொங்கல் விழா தவிா்க்கப்பட்டு ஊரின் எல்லைப் பகுதியில் உள்ள ஒட்டம்மாள் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து, சாமி அழைத்து வந்து வனப்பகுதியில் விடுவித்த பிறகு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் குணமாயின.

தற்போது இதே போல கால்நடைகள் அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளானதால், பொங்கல் விழாவைத் தவிா்த்து, காணும் பொங்கலுக்கு அடுத்த நாள் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக கிராம மக்கள் தயாராகி வருவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com