பாப்பாரப்பட்டி, பென்னாகரத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

2-8-jan_18_pgm_photo_1801chn_214
2-8-jan_18_pgm_photo_1801chn_214

பென்னாகரம் இந்தியன் வங்கியின் முன்பு உறுதிமொழி ஏற்கும் பொதுமக்கள்.

பென்னாகரம், ஜன. 18: பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் ‘நமது லட்சியம் வளா்ச்சி அடைந்த பாரதம்’ விழிப்புணா்வு யாத்திரையில், வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து வாகனத்தின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சிகளில் ‘நமது லட்சியம் வளா்ச்சி அடைந்த பாரதம்’ என்ற விழிப்புணா்வு யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை மாவட்டத்தில் 214 கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வந்தது. அடுத்தகட்டமாக 11 பேரூராட்சிகளில் நடைபெற திட்டமிடப்பட்ட நிலையில், பாப்பாரப்பட்டி, பென்னாகரம் பேரூராட்சிப் பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் முத்ரா திட்டம், புத்தொழில் இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன் பொதுமக்களிடையே எடுத்துரைத்தாா். அதனைத் தொடா்ந்து விழிப்புணா்வு வாகனத்தின் மூலம் மத்திய அரசு திட்டங்கள் குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு காட்சி வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் ‘மத்திய அரசு திட்டத்தில் பங்கு பெற்று பயனடைவோம்’ என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி கிளை மேலாளா் நசீா், நிதிசாா் கல்வி ஆலோசகா் எழில் மணி, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் நிா்வாகி பெருமாள், ராமசாமி, இந்தியன் எரிவாயு முகவா்கள், அஞ்சலக அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com