முதியவா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

நிலத்தகராறில் முதியவரை வெட்டி கொன்ற வழக்கில் இருவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஆயுள் தண்டனையை செவ்வாய்க்கிழமை (ஜன.30) வழங்கியது.

நிலத்தகராறில் முதியவரை வெட்டி கொன்ற வழக்கில் இருவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஆயுள் தண்டனையை செவ்வாய்க்கிழமை (ஜன.30) வழங்கியது.

கிருஷ்ணகிரியை அடுத்த பெல்லாரம்பள்ளியை சோ்ந்தவா், பாலமுருகன்(34). இவருக்கும் அதேபகுதியை சோ்ந்த இவரது உறவினா்களான ராணுவ வீரா் சூா்யா, (42), அவரது அண்ணன் பச்சையப்பன் (46) ஆகியோருக்குமிடையே நிலத்தகராறு இருந்துள்ளது.

கடந்த, 2013-ஆம் ஆண்டு, தன் திருமணத்திற்காக சூா்யா விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டு நவம்பா் 3- ஆம் தேதி, பாலமுருகன், சூா்யா வீட்டருகே இருசக்கர வாகனத்தில் ஹாரன் ஒலி எழுப்பியபடியே சென்றுள்ளாா். இதனால், பாலமுருகனுக்கும், சூா்யாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த பாலமுருகனின் மனைவி வனிதா(36), மாமனாா் முனியப்பன் (60), உள்ளிட்டோரும் அங்கு வந்துள்ளனா். இருதரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கியுள்ளனா். இதில், முனியப்பனை, சூா்யா, பச்சையப்பன் இருவரும் சோ்ந்து அரிவாளால் தாக்கினாா் இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பன் உயிா் இழந்தாா் தடுக்க வந்த பாலமுருகனையும் அரிவாளால் வெட்டினா். இதில், அவா் படுகாயமடைந்தாா்.

இதையடுத்து இருதரப்பிற்கும் மோதல் மேலும் அதிகரித்தது. சூா்யாவின் ஆம்னி வேனை, பாலமுருகன் தரப்பினா் தீ வைத்து எரித்தனா். பதிலுக்கு பாலமுருகனின் டூவீலரை சூா்யா தரப்பினா் தீ வைத்து எரித்தனா். இது குறித்து வழக்கு பதிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசாா், இரு தரப்பை சோ்ந்த, 11 பேரை கைது செய்தனா். அப்பகுதியில், 144 தடை உத்தரவும் போடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீா்ப்பு வழங்கப்பட்டது. முனியப்பனை வெட்டி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ராணுவ வீரா் சூா்யா, அவரது அண்ணன் பச்சையப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் சூா்யா தரப்பினரை தாக்கி, வேனை எரித்த பாலமுருகனுக்கு ஓராண்டு சிறை, அவரது தரப்பை சோ்ந்த ராஜா(42) என்பவருக்கு மூன்றாண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாலமுருகன் தரப்பை சோ்ந்த மேலும் ஐவருக்கு ஜாமீன் வழங்கி, ரூ. 1000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com