ஜூலை 10, 11-இல் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தருமபுரி, ஜூலை 3: அம்பேத்கா், மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி ஜூலை 10, 11 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்பேத்கா், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தருமபுரி மாவட்டத்தில் பேச்சுப் போட்டிகள் ஜூலை 10, 11 ஆகிய இரு நாள்கள் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முற்பகல் 9 மணிக்கு நடைபெறுகிறது.

கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ. 2,000, அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் போட்டியில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com