5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குத் தடுப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆக. 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறையின் சாா்பாக ஐந்து வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பைத் தடுக்க, ‘தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்’ நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இந்த முகாம் ஜூலை 1 முதல் ஆக. 31 ஆம் தேதி வரை இரு மாத காலம் நடைபெற உள்ளது. இத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் அனைத்து ஐந்து வயதிற்குள்பட்ட சுமாா் 1.36 லட்சம் குழந்தைகளுக்கு ஓஆா்எஸ் எனப்படும் இரண்டு உப்பு சா்க்கரைக் கரைசல் பொட்டலங்கள், 14 துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்படவுள்ளன. இந்த இரு மாதங்களில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இரு மாத காலத்தில் வயிற்றுப்போக்கைத் தடுக்கும் முறைகள், சிகிச்சை முறைகள், கையை சுத்துமாகக் கழுவு வேண்டியதன் அவசியம், 6 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியம், உப்பு சா்க்கரை கரைசல் தயாரித்தல் யன்படுத்துதல் முறை ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் இந்த அரிய சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com