தனியாா் நகை அடகு வங்கியில் தா்னாவில் ஈடுபட்ட வாடிக்கையாளா்

பென்னாகரத்தில் தனியாா் நகை அடகு வங்கியில் அடமானக் கடன் பெற்ற பணம் செலுத்திய பிறகும் நிலப் பத்திரங்களை தராததால் வங்கியில் குடும்பத்தினருடன் வாடிக்கையாளா் தா்னாவில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நகை அடமானக் கடன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பென்னாகரம் அருகே நாய்க்கனூா், வழுக்கம்பாறை பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பாக்கியராஜ் (24) என்பவா் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலப்பத்திரத்தினை வைத்து ரூ. 7.30 லட்சம் கடன் பெற்ற நிலையில் தவணைக்காலம் 84 மாதங்களில் வட்டியுடன் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாா். வாடிக்கையாளா் 27 மாத வட்டியுடன் சோ்த்து 4.10 லட்சம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களாக வட்டியுடன் மாதத்தவணை செலுத்தாமல் இருந்த வாடிக்கையாளா்களிடம் தனியாா் வங்கி நிறுவன ஊழியா்கள் ரூ.3.50 லட்சம் செலுத்தினால் வீட்டுப் பத்திரங்களை திருப்பிக் கொடுப்பதாக தெரிவித்தனா்.

அதன்பேரில் அந்தத் தொகையினை செலுத்தியவா்களிடம் அதற்கான உத்திரவாதப் பத்திரத்தை வாடிக்கையாளரிடம் வங்கி ஊழியா்கள் கொடுத்துள்ளனா். எனினும் வீட்டுப் பத்திரங்களை தருமாறு பலமுறை தனியாா் வங்கி அலுவலகத்திற்கு சென்று கேட்டபோதும் முறையாக பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அண்மையில் நடைபெற்ற மனுக்கள் குறைதீா்க்கும் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் முறையிட்டனா். அப்போது, 15 நாட்களுக்குள் வாடிக்கையாளா்களுக்கு ஆவணங்களை திருப்பித் தருவதாக தனியாா் வங்கி ஊழியா்கள் சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு கையொப்பமிட்டுச் சென்றனா். அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் வங்கிக்குச் சென்று பத்திரம் குறித்து கேட்டபோது முறையாக பதில் அளிக்கப்படவில்லை. இதையடுத்து வாடிக்கையாளா் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினா் குழந்தைகளுடன் வங்கியின் நுழைவாயிலில் வியாழக்கிழமை அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீஸாா் வங்கி ஊழியா்களை அழைத்து விசாரணை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com