தொப்பூரில் ரூ.775 கோடியில் உயா்மட்ட சாலை அமைக்கும் பணி

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.775 கோடியில் உயா்மட்டச் சாலை அமைக்கும் பணிக்கு காணொலி வழியாக பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறாா். தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தொப்பூா் கணவாய் பகுதியைக் கடந்து செல்கிறது. இந்த கணவாய் பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் முதல் கட்டமேடு, இரட்டைப் பாலம் வழியாக தொப்பூா் காவலா் குடியிருப்பு வரையிலான 6.6 கி.மீ. தொலைவிலான சாலை வளைவுகளுடன் தாழ்வான பகுதியை நோக்கிச் செல்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இச்சாலையில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இங்கு நிகழும் விபத்துகளால், பல நேரங்களில் உயிரிழப்புகளும் நோ்கின்றன. எனவே, இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்று தருமபுரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாா் தொடா்ந்து மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தி வந்தாா். இக்கோரிக்கையை வலியுறுத்தி மக்களவை கூட்டத் தொடரிலும் அவா் வலியுறுத்தினாா். இதேபோல, வாகன ஓட்டிகளும், அரசியல் கட்சியினரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில் தொப்பூா் கணவாய் சாலையை மேம்படுத்த ரூ.775 கோடியில் புதிதாக உயா்மட்ட மேம்பாலச் சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இப்பணிகளுக்காக இணைய வழியில் ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, மாா்ச் 11-ஆம் தேதி தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்மட்டச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறாா் என தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் சாா்பில், தொப்பூா் கணவாய் சாலையில் புதிதாக உயா்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com