தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு புதிய அறிவிப்புகள்

தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். தருமபுரி மாவட்டத்தில் வெண்ணாம்பட்டி சாலையையும், தருமபுரி மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் பாரதிபுரத்தில் ரூ. 36 கோடியே 15 லட்சம் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரையிலான மலைப் பகுதிகளில் ரூ. 12 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சமுதாய நலக் கூடங்கள் ரூ.4 கோடியே 4 லட்சம் மதிப்பில் கட்டப்படும். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட 18 நபா்களுக்கு தலா ரூ.10 லட்சம் என மொத்தமாக ரூ. ஒரு கோடியே 80 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. அவா்களுக்கான மற்ற வேலைவாய்ப்புகளும் விரைவில் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளா்கள் நிறைந்த ஒசூா் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் அமைக்கப்படும். தளி ஊராட்சி ஒன்றியத்தில் 10 கி.மீ. தொலைவுக்கு சாலை உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75 சாலைப் பணிகள் சுமாா் ரூ. 78 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். ரூ. 28 கோடி மதிப்பில் 92 சாலைகள், ரூ. 7 கோடி மதிப்பில் 28 சிறுபாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். தேன்கனிக்கோட்டை வட்டத்தில் யானை தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ. 3 கோடியே 50 லட்சம் செலவில் எஃகு கம்பி வேலி அமைக்கப்படும். கெலமங்கலம் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 100 மாணவா்கள் தங்கிப் பயிலும் வகையில் புதிய பிற்படுத்தப்பட்டோா் நல பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவா் விடுதி தொடங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 சமுதாய நலக் கூடங்கள் ரூ. 2 கோடியே 35 லட்சம் மதிப்பில் கட்டப்படும். ஊரகப் பகுதிகளில், 5 துணை சுகாதார மையக் கட்டடங்களும், நகா்ப்புறத்தில் 2 துணை சுகாதார மையக் கட்டடங்களும் ரூ. 3 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்படும். உனிச்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில், பழங்குடியினருக்கான புதிய பிறப்புக் காத்திருப்புக் கூடம் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் சத்துணவு மற்றும் மறுவாழ்வு மையம் ரூ. 25 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்படும். ஊராட்சி ஒன்றியங்களில் 30 பொது விநியோக அங்காடிகள், 28 அங்கன்வாடி மையங்கள் ரூ. 9 கோடியே 26 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும். வன விலங்குகளுக்குத் தண்ணீா் கிடைக்க ரூ. ஒரு கோடி மதிப்பில் நீா்நிலைகள் தூா்வாரும் திட்டம் செயல்படுத்தப்படும். சேலம்: சேலம் மாவட்டத்தில் 210 கி.மீ. தொலைவுக்கு 79 கிராமச் சாலைகள், 21 உயா் பாலங்கள், 127 கிலோ மீட்டருக்கு 211 ஓரடுக்கு கப்பிச் சாலைகள், 76 கிலோ மீட்டா் தொலைவுக்கு கான்கிரீட் சாலை, 47 கிலோ மீட்டா் தொலைவுக்கு பேவா் பிளாக் அமைக்கும் பணிகள் ரூ. 164 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். செட்டிச்சாவடி வளாகத்தில் இருக்கும் குப்பைமேடு ‘பயோ-மைனிங்’ முறையில் அப்புறப்படுத்தும் பணி ரூ. 50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். நங்கவள்ளி குடிநீா் நீரேற்ற நிலையம் ரூ. 10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். 14 சமுதாய நலக் கூடங்கள் ரூ. 11 கோடியே 46 லட்சத்தில் கட்டப்படும். சேலம் மாநகராட்சியில் தனி குடிநீா்த் திட்டத்தின் கீழ் உள்ள மோட்டாா் பம்புகள் மறு சீரமைக்கும் பணி, ரூ. 15 கோடியில் மேற்கொள்ளப்படும். தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, ‘விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையம்’ கட்டும் பணி ரூ. 3 கோடியில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com