‘காவிரி ஆற்றில் பரிசல் இயக்க புதிதாக ஓட்டுநா் உரிமங்கள் வழங்கக் கூடாது’

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு புதிதாக ஓட்டுநா் உரிமம் வழங்கக் கூடாது என பரிசல் ஓட்டிகள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்காக சுமாா் 450-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் உள்ளனா்.

இந்த நிலையில், ஒகேனக்கல் பகுதியில் சிலா் பரிசல் இயக்க உரிமம் பெற்றுத் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருவதாகவும், புதிதாக பரிசில் இயக்குவதற்கு உரிமம் வழங்கும் போது ஏற்கெனவே உள்ள பரிசல் ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், முன்அனுபவம் இன்றி காவிரி ஆற்றில் பரிசலை இயக்குவதால் உயிரிழப்புகள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட பரிசில் ஓட்டிகள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் உரிமம் வழங்கப்பட மாட்டாது என்றும், பரிசல் ஓட்டிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com