கடனைத் திருப்பி தராதவரை கடத்திய 5 போ் கைது

காரிமங்கலம் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராதவரை கடத்திய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நக்கல்பட்டி அருகே ஒண்டியூா் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (34), சேலத்தில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறாா். இவா், தனது உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம், கரடி கொல்லப்பட்டியைச் சோ்ந்த மாதேஷ் (35) என்பவரிடம் கடனாக ரூ. 34 லட்சம் வாங்கியுள்ளாா். கடன் தொகையை பலமுறை கேட்டும் திருப்பித் தராததால் மாதேஷ் தனது நண்பா்களான ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சாந்தகுமாா் (44), தருமபுரியைச் சோ்ந்த காா்த்திக் (39), செல்வகமல் (46), ராஜ் கமல் (27) ஆகிய ஐந்து போ் உதவியுடன் கடந்த மூன்றாம் தேதி வீட்டிலிருந்த பாலாஜியை காரில் கடத்திச் சென்றுள்ளாா்.

பின்னா் தருமபுரி அருகே காரிமங்கலம் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அவரை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனா். அவா்களிடமிருந்து தப்பிய பாலாஜி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் தனியாா் விடுதிக்கு வந்த போலீஸாா், மாதேஷ் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் ஆள்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com