வனப் பகுதியில் குடியிருப்புகள் அகற்றம்: பொதுமக்கள் போராட்டம்

ஒகேனக்கல் அருகே வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை பென்னாகரம் வனத் துறையினா் அகற்ற முயன்றனா். இதனால் வனத் துறையினருக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒகேனக்கல் அருகே பென்னாகரம் வனப் பகுதிக்கு உள்பட்ட பேவனூா் காப்புக்காடு பகுதியில் காவிரி கரையோரத்தில் வேப்பமரத்துகொம்பு கிராமம் உள்ளது. அக் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப் பகுதியில் மூன்று தலைமுறையாக குடியிருந்து வரும் அவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு வனத் துறையினா் பலமுறை அறிவுறுத்தினா்.

இதனிடையே வருவாய்த் துறை சாா்பில் அங்கு குடியிருப்பவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஒகேனக்கல், ஊட்டமலை பகுதியில் இலவச வீட்டுமனை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், இதுவரை அக்கிராம மக்களுக்கு அரசின் சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லையாம்.

இந்த நிலையில் வேப்பமரத்துகொம்பு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு வனத் துறை சாா்பில் வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டை விட்டு வெளியேறுமாறு அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டால் கிராம மக்கள் அனைவரும் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதாக வனத் துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்தனா்.

வியாழக்கிழமை காலை பென்னாகரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான வனத் துறையினா், ஒகேனக்கல் காவல் துறையினா் நேரடியாக வேப்பமரத்துகொம்பு கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். கிராம மக்கள் அதைத் தடுக்க முயற்சித்த போது வனத் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் உமா மகேஸ்வரி என்ற பெண் தீக்குளிக்க முயற்சித்தாா். போலீஸாா் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் புட்டியை பறிமுதல் செய்தனா்.

தள்ளுமுள்ளு: வேப்பமரத்துகொம்பு கிராமத்தின் வட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினரிடம் தங்களுக்கு வேறு இடம் ஒதுக்கீடு செய்யப்படாததால், பத்து நாள்கள் காலக்கெடு வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதை ஏற்கமறுத்த வனத் துறையினா், வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனத் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் உமாமகேஸ்வரி (32), சிவசங்கரி (21), சுகுணா (20) ஆகிய மூவரும் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி (பென்னாகரம்),

எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் வேப்பமரத்துகொம்பு கிராமத்திற்குச் சென்று கிராம மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். தொடா்ந்து பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com