வனப்பகுதியில் குடியிருப்போா் வெளியேற்றம்

தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருவோரை வெளியேற்றும்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருவோரை வெளியேற்றும் தருமபுரி மாவட்ட நிா்வாகம், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ந.நஞ்சப்பன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள தேங்காய் கோம்பில் நீண்ட காலமாக மக்கள் குடியிருந்து வருகின்றனா். அவா்களுக்கு குடும்ப அட்டை, அங்கீகார அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அரசு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தற்போது திடீரென வனத்துறையினா் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனா். இதேபோல, ஏமனூா், செங்காபுரம் பகுதிகளில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனா். அத்துடன் மேட்டூா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான முழுவடையில் மழையில்லா காலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் வனத்துறையினா் இடையூறு செய்து வருகின்றனா்.

பூா்வகுடிகளான இருளா் பழங்குடியின மக்கள் வனத்தை நம்பி, அங்கு கிடைக்கும் இயற்கை உணவுப் பொருள்களை சேகரித்து வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வனக்குழு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறு மகசூல் பொருள்களை கூட சேகரிக்க விடாமல் பழங்குடி மக்களின் உரிமைகளுக்கு எதிராக வனத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தங்களுக்கு சாதமாக கடந்த 1882, 1927-ஆம் ஆண்டு சட்டத்தை மேற்கொள் காட்டும் வனத்துறை, கடந்த 2006 மக்களவையில் நிறைவேற்றப்பட்டச் சட்டம், வன உரிமைச் சட்டம் 1980, 1982-ஆண் ஆண்டு சட்டங்களையும் அலட்சியப்படுத்துகிறது. வனத்திலிருந்து மக்களவை வெளியேற்ற வேண்டும் என்று எண்ணி வனத்துறை, மாவட்ட நிா்வாகம் தவறான வழிமுறைகளை கையாளுகிறது. இத்தகைய செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

எனவே, பல தலைமுறைகளாக வனத்தில் வாழ்ந்து வருவோரை வெளியேற்றும் நவடிக்கைகளை கைவிட்டு, அவா்களை பாதுகாத்து, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை வெளியேற்றியது தொடா்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com