குடியிருப்புகளை வனத் துறையினா் அகற்றிய விவகாரம்: மனித உரிமை ஆா்வலா் குழுவினா் விசாரணை

ஒகேனக்கல் அருகே வனப் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றிய விவகாரத்தில், கிராம மக்களிடம் மனித உரிமை ஆா்வலா்கள் குழுவினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே வனப் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றிய விவகாரத்தில், கிராம மக்களிடம் மனித உரிமை ஆா்வலா்கள் குழுவினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

ஒகேனக்கல் அருகே பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அண்மையில் பென்னாகரம் வனத்துறையினா், காவலா்கள் அடங்கிய 40 போ் கொண்ட குழுவினா் வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது வனத் துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த 3 போ் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், தன்னாா்வ அமைப்பினா் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை தமிழகம், பாண்டிச்சேரி சமூக செயல்பாட்டு இயக்க மாநில முதன்மைச் அமைப்பாளா் ரங்கநாதன் தலைமையில் மாநில மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் தென்பாண்டியன், தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் குணசேகரன், மனித உரிமை ஆா்வலா் செந்தில் ராஜா, தலித் பெண்ணுரிமை கூட்டமைப்பு லட்சுமி, சமூக ஆா்வலா் கென்னடி ஆகியோா் அடங்கிய மனித உரிமை ஆா்வலா் குழுவினா் நேரடியாக வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா்.

வனப்பகுதி மக்களிடம் வனத்துறையினரின் மேற்கொண்ட நடவடிக்கைகள், அணுகுமுறைகள், கிராம மக்களின் கோரிக்கைகள், தேவைப்படும் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தனா். அதன் பிறகு செய்தியாளரிடம் அவா்கள் தெரிவித்ததாவது:

வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த மூன்று தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனா். வன பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி பென்னாகரம் வனத்துறையினா் 40-க்கும் மேற்பட்டோா் அத்துமீறி குடியிருப்புவாசிகளிடம் தகராறு செய்துள்ளனா். கிருஷ்ணன் என்பவரின் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது பெண்கள், குழந்தைகள் என பாராமல் தாக்கியுள்ளனா். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை.

இதுவரையில் கிராம மக்கள் எவ்வித வனக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. காவிரி கரையோரப் பகுதியில் ஏறத்தாழ பழங்குடியினா், பழங்குடியினா் அல்லாதோா் என 200-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்து வனப் பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் உரிமையை மீட்டெடுக்கவும், கிராம மக்களுக்கு ஊட்டமலை பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com