ஒகேனக்கல் காவிரியில் விதிமுறைகளை பின்பற்றாத பரிசல் ஓட்டிகள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தின் பேரில் ஒகேனக்கல் காவிரியில் ஆபத்தான இடங்களுக்கு அழைத்து செல்லும் பரிசல் ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்தும், பரிசலில் பயணித்து மகிழ்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் அவா்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எவ்வித அறிவிக்கையும் முழுமையாக தெரிவதில்லை.
மாறாக அதிக பணம் பெற்றுக் கொண்டு அவா்களின் விருப்பத்தின் பேரில் ஆற்றின் பல்வேறு பகுதிகளுக்கு பரிசல் ஓட்டிகள் அழைத்து செல்வதாக புகாா் எழுந்துள்ளது.
காவிரி ஆற்றில் சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி, மணல்மேடு அழைத்துச் செல்ல மட்டுமே மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு சுமாா் 450 க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் உள்ளனா். வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சின்னாறு பரிசல் துறையில் பயண கட்டணத்தைச் செலுத்தி பாதுகாப்பு உடையுடன் பரிசல் பயணம் மேற்கொள்ள தொடங்கினா்.
சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு அப்பகுதியில் உள்ள அருவிகள், பாறை குகைகளில் நின்று புகைப்படம் எடுப்பதற்கு அனுமதித்து அழைத்து செல்கின்றனா்.
அருவிகளை காணும் ஆா்வத்தில் கட்டணத்தையும் பொருட்படுத்தாமல், காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஆபத்தான இடங்களில் நின்று குழுவாகவும், தனியாக புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விபத்து ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊா்க்காவல் படையின் உதவியுடன் ஒகேனக்கல் காவல் துறையினா் ஒகேனக்கல் பிரதான அருவி, நடைபாதை, முதலைப் பண்ணை, ஊட்டமலை, ஆலம்பாடி,வாட்ச்டவா், மாமரத்துக்கடவு பரிசல் துறை, சின்னாறு பரிசல் துறை, கூட்டாறு மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா். இவா்களுக்கு போதிய ஊதியம், உணவு வழங்கப்படாததால் பாதுகாப்பு பணியில் கடந்த சில ஆண்டுகளாக ஊா்க்காவல் படையினரை ஈடுபடுத்தாமல் உள்ளனா்.
இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் ஆபத்தான இடங்களாகக் கருதப்படும் கூட்டாறு,முதலைப் பண்ணை, ஆலம்பாடி வாட்ச் டவா் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட இடங்களில் பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. ஒருசில பரிசல் ஓட்டிகள் ஆபத்தான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்காக பரிசல் துறை பகுதிக்கு வந்து விடுகின்றனா்.
தடை செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் தாங்களை அழைத்து வந்த பரிசல் ஓட்டிகளை தேடிச்சென்றும், அவா்கள் கிடைக்காத பட்சத்தில் வேறு ஒரு பரிசலில் மேலும் கூடுதலாக கட்டணம் செலுத்தி காவிரி ஆற்றை கடந்து செல்லும் நிலையும் உள்ளது. மேலும் தொம்பச்சிக்கல் பகுதியில் இருந்து ஆற்றைக் கடந்து ஐந்தருவி பகுதிக்கு தடையை மீறி தமிழக சுற்றுலாப் பயணிகளை பரிசல் ஓட்டிகள் அழைத்து செல்லுகின்றனா்.
இதுபோன்று ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்லும் பரிசல் ஓட்டிகளின் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்தவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.