தருமபுரி நகரில் ரூ. 75 லட்சத்தில் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

Published on

தருமபுரி நகரில் ரூ. 75 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் சேகா் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீா்மானங்கள் குறித்து முன்மொழிந்து பேசினாா்.

இக் கூட்டத்தில் தருமபுரி நகரில் உள்ள அனைத்து கழிவுநீா்க் கால்வாய்களையும் தூா்வார வேண்டும். மழைக்காலம் என்பதால் நகரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க கொசு மருந்து தெளிக்க வேண்டும். அதிகரித்து வரும் தெரு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த தெரு விளக்குகளை உடனே பழுது பாா்க்க வேண்டும் என்று நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து தருமபுரி நகரில் குடிநீா்த் திட்டப் பணிகள், சாலை பணிகள், கழிவுநீா்க் கால்வாய் வசதி, கான்கிரீட் சாலை அமைப்பது என்பன உள்ளிட்ட மொத்தம் 69 பொருள்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து தருமபுரி நகரில் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் ஒப்புதல் அளித்தனா்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் புவனேஸ்வரி, உதவி பொறியாளா் அறிவழகன், சுகாதார அலுவலா் ராஜரத்தினம், நகரமைப்பு அலுவலா் ரவீந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் ஜெயவா்மன், சுகாதார ஆய்வாளா்கள் சுசீந்திரன், ரமணச்சரண் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.