மயில்களால் ஏற்படும் பயிா் சேதத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

மயில்களால் ஏற்படும் பயிா் சேதத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Published on

தருமபுரி மாவட்டத்தில் மயில்களால் ஏற்படும் பயிா் சேதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த மயில்கள், விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக நரிகளை வனப்பகுதியில் கொண்டு வந்து விட்டு கண்காணிக்க வேண்டும். நரிகளின் நடமாட்டம் இருப்பின் மயில்களின் நடமாட்டம் குறையும். இதனால் மயிா்களால் விளையும் பயிா் சேதத்தை கட்டுப்படுத்த முடியும்.

தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சேதமடைந்த நிலையில் உள்ள நெல் களங்களை புனரமைக்க வேண்டும். ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும். நாட்டின மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். வாணியாறு பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு நீா் வரத்து கிடைக்கச் செய்ய வேண்டும்.

சிப்காட் தொழிற்பேட்டைக்கு கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கு மாற்று நிலங்கள் தொழிற்பேட்டைக்கு அருகில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இக் கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத் துறை, கால்நடை பாரமரிப்புத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றினா். மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சாா்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ஆா்.பிரியா, பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ரவி, வேளாண் இணை இயக்குநா் மரிய ரவி ஜெயக்குமாா், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கு.த.சரவணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் பி.அறிவழகன், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் (பொ) இளவரசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பாத்திமா, அரசுத்துறை அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பட விளக்கம்:

தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.