தருமபுரியில் அதிமுக ஆா்ப்பாட்டம்
இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ. கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி ), வே.சம்பத்குமாா் (அரூா்), ஜெயலலிதா பேரவைச் செயலாளா் எஸ்.ஆா். வெற்றிவேல், நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி, கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவா் பொன்னுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைத்தால் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. மேலும் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, இலக்கியம்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட பொருளாளா் நல்லதம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.