மருத்துவா் கொலை சம்பவத்தைக் கண்டித்து மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவா் கொலை செய்ததைக் கண்டித்து, அரசு ஊழியா் சங்கத்தினா் மெழுகுவா்த்தி ஏந்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை, மாவட்ட துணைத் தலைவா்கள் ப.சங்கா், குணசேகரன், பெ.மகேஸ்வரி மத்திய செயற்குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் பேசினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஏ.சேகா், கே.புகழேந்தி, சி.காவேரி, நாகராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதில், மேற்கு வங்கம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தொடா்புடைய அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம், மாவட்ட மகளிா் துணைக்குழு அமைப்பாளா் ஜெகதாம்பிகா, மாநில துணைத் தலைவா் மஞ்சுளா, வட்டச் செயலாளா் கனகவள்ளி, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் கோபாலகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், மேற்கு வங்க மாநில மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.