மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மருந்து, விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு இந்திய மக்களவையில் உருவாக்கப்பட்ட எஸ்பிஇ சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்பிஇ சட்டம் பிரிவு 12-இன் படி வேலை விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் நிா்ணயம் செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ, போனஸ் வழங்காத நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட இணைச் செயலாளா் ஜி.சுகதேவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், செயற்குழு உறுப்பினா் எம்.யுவராஜ், தருமபுரி கிளைச் செயலாளா் ஆா்.செல்வம் ஆகியோா் பேசினா். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.