கல்வி நிலையங்கள், நிறுவனங்களில் பாதுகாப்பு குழ அமைக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுரை
கல்வி நிலையங்கள், பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் புகாா் குழு, பாதுகாப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் பணியாளா்கள் உள்ள அனைத்து பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தீா்வு, தடை) இன்படி புகாா் குழு, பாதுகாப்பு பெட்டி அமைக்க ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள்ளக புகாா் குழு, பாதுகாப்பு பெட்டி அமைத்து மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியாா் அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்களில் புகாா் குழு மற்றும் பாதுகாப்பு பெட்டி வரும் செப். 7 -ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காத அலுவலகம், நிறுவனங்களின் மீது ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, கல்வித் துறை இணை இயக்குநா் சிந்தியாசெல்வி, சமூக நல அலுவலா் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நடராஜன், காவல் துணை கண்காணிப்பாளா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், அனைத்து கல்லூரி முதல்வா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.