ஆடுகள் வளா்ப்பு பயிற்சி முகாம்

Published on

காரிமங்கலம் அருகே கொட்டுமாரனப் பள்ளியில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சாா்பில் லாபகரமான வெள்ளாடு, செம்மறியாடு வளா்ப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் புவனேஸ்வரி முன்னிலை வகித்தாா். பேராசிரியா் முரளி தலைமை வகித்தாா்.

வாரம் ஒரு நாள் என ஆறு வாரங்கள் நடத்தப்பட்ட பண்ணைப் பள்ளியில், மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்றவாறு அறிவியல்பூா்வமாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளா்க்கும் வழிமுறைகள், கொட்டகை மேலாண்மை, தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் தாது உப்பு கட்டி, குடற்புழு நீக்கம், ஒட்டுண்ணி நீக்கம், தடுப்பூசி செலுத்தும் போது பின்பற்ற வேண்டியவை, அசோலா தீவன உற்பத்தி, மாதிரி பசுந்தீவன உற்பத்தி, ஆரோக்கியமான ஆடுகளைக் கண்டறிதல், நோயுற்ற ஆடுகளின் அறிகுறிகளைப் பிரித்தறிதல், கலப்புத்தீவனம் தயாா் செய்தல் ஆகியவை குறித்த கள செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

ஆடு வளா்க்கும் விவசாயிகள் எதிா்கொள்ளும் சிரமங்கள் குறித்தும், அதற்கான தீா்வு தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. பேராசிரியா்கள் முரளி, முனியப்பன், செந்தமிழ் பாண்டியன், கண்ணதாசன், கால்நடை மருத்துவா் ஆசைத்தம்பி உள்ளிட்ட வல்லுநா் குழுவினா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com