ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம்
வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனா்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் குவிந்ததால் அந்தப் பகுதி கூட்ட நெரிசலாகக் காணப்பட்டது. சின்னாறு பரிசல் துறையில் சுமாா் 2 மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து பாதுகாப்பு உடையணிந்து கூட்டாறு, பிரதான அருவி வழியாக மணல்மேடு வரை குடும்பத்தினருடன் உற்சாக பரிசை பயணம் மேற்கொண்டனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் மீன் விற்பனை நிலையங்களில் மீன் வகைகளின் விலை அதிகரித்த போதிலும் அசைவப் பிரியா்கள் மீன்களை வாங்கி சமைத்து சிறுவா் பூங்கா, உணவு அருந்தும் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அமா்ந்து சாப்பிட்டனா்.
ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பரிசல் துறை, பேருந்து நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.