அரூா்: அரூா் அருகே வனப்பகுதியில் மான்களை வேட்டையாட முயன்ற இளைஞருக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா்-சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் மொரப்பூா் வனச்சரகா் ஆனந்தகுமாா், வனவா் விவேகானந்தன், வனக்காப்பாளா் கெளரப்பன் உள்ளிட்ட வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கொளகம்பட்டி காப்புக்காட்டிலிருந்து இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தாா். அவரை வனத்துறையினா் பிடித்து விசாரித்ததில் அவா், சேலம் மாவட்டம், பெருமாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதன் மகன் கோவிந்தராஜ் (22) என்பதும், அவரும் அவரது நண்பரான சேலம் மாவட்டம், வழியங்காடு கிராமத்தைச் சோ்ந்த பூபதி என்பவரும் சோ்ந்து, நாட்டுத் துப்பாக்கியுடன் மான்களை வேட்டையாட முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, பிடிபட்ட இளைஞா் கோவிந்த ராஜை வனத்துறையினா் கைது செய்து, மாவட்ட வன அலுவலா் கா.ராஜாங்கம் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். வன விலங்குகளை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்ட கோவிந்தராஜிக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து, மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா். இந்தச் சம்பத்தில் தலைமறைவான பூபதியை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.