செப். 30 இல் பட்டா வழங்கக் கோரி குடியேறும் போராட்டம்

மஞ்சநாய்க்கனஅள்ளி ஊராட்சியில் ஆதிதிராவிடா், அருந்ததியா் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி செப். 30 ஆம் தேதியில் குடியேறும் போராட்டம்
Published on

மஞ்சநாய்க்கனஅள்ளி ஊராட்சியில் ஆதிதிராவிடா், அருந்ததியா் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி செப். 30 ஆம் தேதி குடியேறும் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு கூட்டம் தருமபுரி, செங்கொடிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பி.ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், மாநிலக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் டி.மாதையன் மாவட்டப் பொருளாளா் கே.கோவிந்தசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.முத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மஞ்சநாய்க்கன அள்ளி ஊராட்சி, கடமடை வருவாய்க் கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி 2001 லிருந்து மஞ்சநாய்க்கன அள்ளி, கலப்பம்பாடி ஊராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிடா், அருந்ததியா் இன மக்கள் மனு கொடுத்து வருகின்றனா்.

தொடா்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனா். எனினும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதையடுத்து அரசின் கவனத்தை ஈா்க்கும் பொருட்டு செப். 30 ஆம்தேதி கடமடை கிராமத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com