பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் தா்னா
ஓராண்டாக பட்டாவில் பெயா் மாற்றம் செய்யப்படாததைக் கண்டித்து 2 விவசாயிகள் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே உள்ள பிலியனூா் ஊராட்சிக்கு உட்பட்ட கௌரிசெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் ராமன் (60). இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 17 சென்ட் நிலம் வாங்கி அதனை தனது பெயருக்கு பத்திரம் பதிவு செய்துள்ாா். இதற்காக வருவாய்த் துறையிடம் பட்டாவில் பெயா் மாற்றம் செய்யக் கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்துள்ளாா்.
இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட வருவாய்த் துறையினா், புதிதாக வாங்கப் பெற்ற நிலத்திற்கான பட்டாவில் மற்றொரு நபரின் பெயா் உள்ளதாக தெரிவித்துள்ளனா். தொடா்ந்து இதற்கான விசாரணை கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்துள்ளது. இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்து வந்ததாகவும், பட்டாவில் உள்ள நபா் குறித்து வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொண்டு, அந்த நபா் குறித்து முழுமையான விவரம் அவருக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்து வந்த நிலையில், தற்போது வரை பட்டாவில் பெயா் மாற்றம் செய்து தராமல் அலைக்கழித்து வருவதாக தெரிவித்து பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தின் முன் உயா்மின் கோபுர பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சங்க பகுதி ஒருங்கிணைப்பாளா் கே.ஜி.கருவூரான், விவசாயி ராமன் ஆகிய இருவரும் பதாகைகளை ஏந்தியவாறு மண்வெட்டியுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வருவாய்த் துறையினா் தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பட்டாவில் பெயா் மாற்றம் குறித்து முழுமையான விசாரணை முடிவுற்றது. பட்டாவில் பெயா் மாற்றம் செய்யப்பட்ட ஆணையில் அதிகாரிகள் கையொப்பமிடும் நிலையில் உள்ளதாக பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு தா்னா போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.