மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் ரூ. 4.28 கோடி திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்
தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் 15ஆவது மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 4.28 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா மதிவாணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சி செயலா் கருணாநிதி, கூட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினாா். இக் கூட்டத்தில் நிகழாண்டிற்கான 15 ஆவது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 4.28 கோடி மதிப்பில் நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 30 சதவீத குடிநீா்த் திட்டப் பணிகளுக்கும், 30 சதவீத கழிவுநீா் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்கும், மீதமுள்ள 40 சதவீதி நிதி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களின் பரிந்துரையின் படி மற்ற திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான மாநில நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 3.99 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளுக்கும், 15-ஆவது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 2.25 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். அதற்கு தலைவா் மற்றும் செயலாளா் பதிலளித்தனா்.