இரு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம்: 5 பேரிடம் போலீஸாா் விசாரணை
தருமபுரி அருகே இரு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 5 பேரிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி அருகே வெத்தலக்காரன்பள்ளம் பகுதியில் புது சிப்காட் வளாகத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் கடந்த 24 ஆம் தேதி 55 வயது மதிக்கத்தக்க ஆண், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோரின் சடலங்கள் கத்தியால் குத்திய காயங்களுடன் கிடப்பதாக அதியமான் கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நிகழ்விடத்திற்குச் சென்ற போலீஸாா் இரு உடல்களையும் மீட்டு வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் தேனி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனம் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்தது தெரிய வந்த நிலையில், அதன் அடிப்படையில் தனிப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் இறந்த நபா்கள் தேனி மாவட்டம், சங்கராபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) என்பதும் இருவரும் ஆன்லைன் மூலம் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனா். இவ்விருவரையும், தேனி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்த சிலா் திட்டமிட்டு கடத்தி கடந்த 22 ஆம் தேதி கொலை செய்து, 24-ஆம் தேதி தருமபுரி அருகே சடலங்களை வீசி சென்றது தெரிய வந்தது.
இந்த வழக்கில் தொடா்புடையதாக தேனி மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.