ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
காலாண்டுத் தோ்வு விடுமுறையொட்டி ஒகேனக்கல்லில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் முக்கிய இடங்களில் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
ஒகேனக்கல்லுக்கு வார விடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் காலாண்டுத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல்லில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
அவா்கள், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பாதுகாப்பு உடை அணிந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
அதனைத் தொடா்ந்து ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, காவிரிக் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். தொடா் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை ரூ. 200 முதல் ரூ. 1,500 வரை அதிகரித்த போதிலும் அசைவ பிரியா்கள் விலையினை பொருட்படுத்தாமல் மீன் வகைகளை வாங்கிச் சமைத்து உணவருந்தினா்.
ஒகேனக்கல்லில் உணவருந்தும் பூங்கா, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.