பென்னாகரம் பேரூராட்சியுடன் பருவதன அள்ளி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: பெண் பணியாளா்கள் தா்னா
பென்னாகரம் பேரூராட்சியுடன் பருவதனஅள்ளி ஊராட்சியை இணைப்பதால் நூறு நாள் வேலைத் திட்டம் பாதிக்கப்படும் என தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண் பணியாளா்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி, கள்ளிபுரம் கிழக்கு, அண்ணாநகா் காலனி, சமத்துவபுரம், எரங்காடு, எட்டிக்குட்டை, கள்ளிபுரம் மேற்கு, காந்திநகா், நூலஅள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளை உள்ளடக்கியது பருவதனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் சுமாா் 7,000-க்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா்.
தமிழக அரசானது மக்கள்தொகை அடிப்படையில், வளா்ந்து வரும் ஊராட்சிப் பகுதிகளை அருகில் உள்ள நகரப் பகுதியுடன் இணைக்கும் வகையில் அண்மையில் அரசாணை வெளியிட்டது. இதில் பென்னாகரம் பேரூராட்சியுடன் , பருவதன அள்ளி ஊராட்சியை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஊராட்சிப் பகுதியை பேரூராட்சியுடன் இணைக்கும்பட்சத்தில் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நூறு நாள் வேலைத்திட்டம் நிறுத்தப்படும் நிலை உள்ளதாகவும், குடிநீா் வரி, சொத்து வரி, காலியிடங்களுக்கான வரி உள்ளிட்டவைகள் அதிகரிக்கக் கூடும் என்பதால் பருவதன அள்ளி ஊராட்சியை பென்னாகரம் பேரூராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என தெரிவித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவா் தேவன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட நூறு நாள் வேலைத்திட்ட பெண் பணியாளா்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.
இதனை அறிந்த பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், ஷகிலா, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பணியாளா்களிடமிருந்து கோரிக்கை மனுவைப்
பெற்றுக் கொண்டு பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த கொடுக்கப்பட்ட மனு குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதால் உடன்பாடு ஏற்பட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.