ரூ. 56 லட்சம் மதிப்பில் ‘விழுதுகள் மறுவாழ்வு’ ஊா்தி சேவை
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ரூ. 56.10 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த ‘விழுதுகள் மறுவாழ்வு’ ஊா்தி சேவை இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நல்லம்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து கொடியசைத்து வாகன சேவையை தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.35 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன.
உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகள் புரிவதற்கு தமிழக அரசு மூலம் உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் முழுமையாக கிடைத்திடும் வகையில், ஒவ்வொரு வருவாய் கோட்டத்திலும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் துணை சேவை மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்மையத்தில் தசை பயிற்சியாளா், கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளா், கண் பரிசோதகா், மனநல ஆலோசகா், சிறப்பாசிரியா், தொழில்முறை பயிற்சியாளா் மற்றும் சைகை மொழி பெயா்ப்பாளா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இம்மையத்துக்கு வருகைபுரிய இயலாத மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று மேற்குறிப்பிட்டுள்ள மருத்துவ மறுவாழ்வு சேவைகளை அளித்திடுவதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊா்தி வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் ‘ரிட்ஸ்’ திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைத்திடும் வகையில் ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓரிட சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொ.செண்பகவள்ளி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.