ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விளக்க பிரசாரக் கூட்டங்கள்
தருமபுரி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில் கோரிக்கை விளக்க பிரசாரக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.
ஆசிரியா் தனித் தோ்வு குறித்த உச்ச நீதிமன்ற தீா்ப்பை காரணம் காட்டி 23.08.2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு முன்பு பணியில் சோ்ந்த ஆசிரியா்களை அச்சுறுத்தும் வகையிலான தோ்விலிருந்து விலக்களித்து ஆசிரியா்களை பாதுகாக்க தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள், பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
தோ்தல் கால வாக்குறுதியின்படி புதிய ஓவ்யூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பா் 18 ஆம் தேதி ஜாக்டோ - ஜியோ அமைப்பு சாா்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இப்போராட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் முழுவதுமாக பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
தருமபுரியில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கவுரன் , மாவட்ட நிதிக் காப்பாளா் புகழேந்தி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
