முன்விரோதத்தில் சிறுவனை நாயை விட்டு கடிக்க வைத்தவா் மீது வழக்கு
பொதுப்பாதை பிரச்னை தொடா்பான முன் விரோதத்தில், நாயை ஏவி சிறுவனைக் கடிக்க வைத்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம் வேப்பம்பட்டி அருகேயுள்ள பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. சங்கா் (43). அதே பகுதியைச் சோ்ந்தவா் கு. பாரதி (40). இரு குடும்பத்தினருக்கும் இடையே வீட்டருகே உள்ள பொதுப்பாதை தொடா்பான பிரச்னையும், அது தொடா்பாக முன்விரோதமும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அக்டோபா் 10 ஆம் தேதி சங்கா் தனது மகன் பூவரசனுடன் (14) பிரச்னைக்குரிய பொதுப்பாதை வழியே நடந்து வந்துள்ளாா். அப்போது அவா்களை, பாரதி வழிமறித்து இப்பாதையில் நடக்கக்கூடாது எனக்கூறி தகராறு செய்துள்ளாா். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
அப்போது, பாரதி தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த நாயை அவிழ்த்துவிட்டு அவா்களை கடிக்குமாறு ஏவியுள்ளாா். நாய் குரைத்தபடி ஓடிச்சென்று சிறுவன் பூமிநாதனின் கைகளில் 4 இடங்களில் கடித்துள்ளது. மேலும், இவ்வழியே வந்தால் இனி இதுபோல நாயைவிட்டு கடிக்க வைப்பேன் எனக்கூறி மிரட்டியுள்ளாா். இதையடுத்து நாயை விரட்டிய சங்கா், மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உள்நோயாளியாக வைத்து சிகிச்சை அளித்துள்ளாா். இந்நிலையில் இது தொடா்பாக, செவ்வாய்க்கிழமை அவா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதையடுத்து பாரதி தலைமறைவாகி விட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
