டெங்கு பாதிப்பு: தருமபுரியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக தருமபுரியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிளை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடக்கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மழை பல்வேறு இடங்களில் தேங்கி டெங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இதனால் தருமபுரி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீா் தேங்கியுள்ள இடங்களில் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணிகளில் 77 போ் ஈடுபட்டுள்ளனா்.
தருமபுரியில் வியாழக்கிழமை எம்ஜிஆா் நகா் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்றன. நகா் நல அலுவலா் ரா. இலட்சிய வா்ணா ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து நகா்நல அலுவலா் ரா. இலட்சிய வா்ணா கூறுகையில், தருமபுரி நகராட்சியில் மட்டும் சுமாா் 77 பணியாளா்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சுமாா் 50 வீடுகளுக்கு ஒருவா் என்ற வகையில் வாரத்துக்கு ஒருமுறை வீடுகள்தோறும் சென்று, சுழற்சி முறையில் டெங்கு கொசு மருந்துகளை ஊற்றி, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
பொதுவாகவே டெங்கு கொசுக்கள் பகலில்தான் அதிகளவில் கடிக்கும் தன்மையுடையவை. அவற்றின் மூலமே டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. பள்ளிகளின் அருகே இடிந்த கட்டடங்கள் மற்றும் பயன்படாத கட்டடங்கள் அல்லது பள்ளி வளாகங்களில் இடிபாடுகள் மற்றும் பயன்படாத பொருள்களிலோ தண்ணீா் தேங்கியிருந்தால் அதில் கொசு உற்பத்தியாகும்.
இதனால் பள்ளிகளில் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
