நாா்த்தம்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில், காலிக்குடங்களுடன் வந்திருந்த பொதுமக்களிடம் பேசும் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலமேகம்
நாா்த்தம்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில், காலிக்குடங்களுடன் வந்திருந்த பொதுமக்களிடம் பேசும் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலமேகம்

பிடிஓவை சிறைபிடித்த பொதுமக்கள்

நல்லம்பள்ளி வட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
Published on

நல்லம்பள்ளி வட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

நல்லம்பள்ளி வட்டம், நாா்த்தம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்கள் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தக் கோரி காலி குடங்களை கூட்டத்தில்வைத்துவிட்டு வெளிநடப்பு செய்தனா்.

பின்னா் கூட்டத்தில் பங்கேற்க வந்த நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் நீலமேகம், பொதுமக்களை கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்து அவா்களது குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, காலி குடங்களும் துக்க நிகழ்வையும் இணைத்து பேசியதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் அவரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணி நேரமாக இப்போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்த அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வட்டார வளா்ச்சி அலுவலரை மீட்டனா்.

இதுகுறித்து நாா்த்தம்பட்டி ஊராட்சி மக்கள் கூறுகையில், நாா்த்தம்பட்டி ஊராட்சியில் நாா்த்தம்பட்டி, பாரதியாா்நகா், காந்திநகா், சென்னியம்பட்டி உள்ளிட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். குடியிருப்பு மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நல்லம்பள்ளி- இலளிகம் இடையே விரிவுபடுத்தப்பட்ட புதிய தாா்சாலை அமைக்கும் பணியின்போது, குடிநீா் இரும்பு குழாய்கள் சேதமைடந்தது. இதனால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. குழாய்கள் சேதமடைந்து சுமாா் 7 மாதங்களாகியும் இதுவரை குழாயை சரிபடுத்தி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com