வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: ஆட்சியரக வளாகத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை
தருமபுரி: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான முன்னேற்பாடு ஒத்திகை நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவ மழையின்போது, அசம்பாவிதங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தொடா்பான ஒத்திகை நிகழ்வுகளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் செய்து காட்டினா்.
இதில், நவீன உபகரணங்களான ரோப் லான்ஞ்சா், மோட்டாா் போட், லைப் பாய், லைப்ஜாக்கெட், ரெஸ்கியு டியுப், ரெஸ்கியு துரோபேக், அஸ்கா லைட், ஹைடிராலிக் கட்டா், பவா் ஷா மற்றும் ஸ்கூபா டைவிங், விலங்குகளை மீட்கும் நவீன மீட்பு வலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பயிற்சியில், ஏணி மூலம் மீட்பது, மோட்டாா் படகு மூலம் மீட்பது, லைப்ஜாக்கெட் உதவியுடன் மீட்பது, வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை நவீன மீட்புவலை பயன்படுத்தி மீட்பது, ரெஸ்க்யூ டியூப் மற்றும் துரோபேக் சாதனங்களை பயன்படுத்தி மீட்பது, நதியின் மறுகரையில் சிக்கியவா்களை ரோப் லான்ஞ்சா் பயன்படுத்தி மீட்பது, வெள்ளத்தில் மூழ்கியவா்களை ஸ்கூபா உதவியுடன் மீட்பது, மற்றும் மீட்கப்பட்டவா்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பன குறித்து மாவட்ட தீயணைப்புத் துறையினா் பொதுமக்களுக்கு செய்து காட்டினா் என்றாா்.
தொடா்ந்து, தீயணைப்புத் துறையில் உள்ள செயற்கருவிகள் மற்றும் சிறப்பு உபகரணங்களை ஆய்வுசெய்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ப.அம்பிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
