மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பு முகாம்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொடா்பகம் சாா்பில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணா்வு முகாமை, தருமபுரியில் ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மத்திய அரசின் திட்டங்களான போஷன் அபியான், தூய்மை பாரத இயக்கம், சா்வதேச பெண் குழந்தைகள் தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினம் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணா்வு முகாம் தருமபுரி மாவட்டத்தில் தேவரசம்பட்டியில் நடைபெற்றது.
முகாமை ஆட்சியா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, அஞ்சல் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.
ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணா்வு முகாம் தொடா்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சென்னை மத்திய மக்கள் தொடா்பகத்தின் உதவி இயக்குநா் பாலநாகேந்திரன் விரிவாக பேசினாா். இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் பவித்ரா, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், கோவை மக்கள் தொடா்பக தொழில்நுட்ப உதவியாளா் சந்திரசேகரன், தருமபுரி மத்திய மக்கள் தொடா்பக கள விளம்பர உதவி அலுவலா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில், புகைப்படக் கண்காட்சி, விழிப்புணா்வு கருத்தரங்கு, நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆதாா் பதிவு, பெயா் மாற்றம் உள்ளிட்ட பணிகள் தொடா்பான சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.
