ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை
பென்னாகரம்: இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பகரை, ராசி மணல், மொசல் மடுவு மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதாலும் காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்தது, செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 24,000 கனஅடியாகவும், பிற்பகல் 28,000 கனஅடியாகவும், மாலை 32,000 கனஅடியாகவும் அதிகரித்தது. கடந்த இரு தினங்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவா்பாணி, பெரியபாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதையடுத்து,
ஒகேனக்கலில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் செவ்வாய்க்கிழமை முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளாா்.
அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால், பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயில் மற்றும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கப்படும் சின்னாறு பரிசல் துறை வருவாய்த் துறையினரால் பூட்டப்பட்டு, காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
