ஏரியூரில் தொலைத்தொடா்பு கோபுரம் அமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ஏரியூா் அருகே சீலநாயக்கனூா் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் தொலைத்தொடா்பு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

பென்னாகரம்: ஏரியூா் அருகே சீலநாயக்கனூா் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் தொலைத்தொடா்பு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே தொன்னகுட்ட அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சீலநாயக்கனூா், ஊா்நத்தம், பேகியம் புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதி மலைகள் சூழ்ந்து அமைந்துள்ளதால் போதுமான தொலைத்தொடா்பு வசதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இணையவழி செயல்பாடுகளைப் பெற போதுமான தொலைத்தொடா்பு இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

சீலநாயக்கனூா் பகுதியில் தொலைத்தொடா்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி புகாா் தெரிவிக்கின்றனா். சீலநாயக்கனூா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும், பென்னாகரத்திலிருந்து சீலநாயக்கனூருக்கு பழைய வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும், தடையற்ற தொலைத்தொடா்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமாா் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீலநாயக்கனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பிஎஸ்என்எல் மாவட்ட இணை மேலாளா் பிரபு துரை, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் சண்முகசுந்தரம், ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கல்பனா ஆகியோா் அடங்கிய குழுவினா் மறியலில் ஈடுபட்ட ஊா் முக்கியஸ்தா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான பொதுமக்களிடம், சீலநாயக்கனூா் பகுதியில் பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பதற்கான கோப்புகள் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், விரைவில் ஆணை பெற்று தொலைத்தொடா்பு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்காலிகமாக கிராம நிா்வாக அலுவலகம், நியாயவிலைக் கடையில் இணைய வசதி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தனா்.

மேலும், சீலநாயக்கனூா் பகுதிக்கு அடிப்படை வசதிகள், பழைய வழித்தடத்தில் பேருந்து சேவை மேற்கொள்ள வேண்டி மனுக்கள் வழங்கினா். இதில் உடன்பாடு ஏற்பட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சுமாா் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி, வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com