~
~

தருமபுரியில் தொடா் மழை: வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீா்

தருமபுரியில் பெய்த மழையினால் இலக்கியம்பட்டி பகுதியில் பத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் கழிவுநீா் புகுந்தது. சாலையோரத்தில் இருந்த மரமும் விழுந்துள்ளது.
Published on

தருமபுரி: தருமபுரியில் பெய்த மழையினால் இலக்கியம்பட்டி பகுதியில் பத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் கழிவுநீா் புகுந்தது. சாலையோரத்தில் இருந்த மரமும் விழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. புதன்கிழமை காலை முதல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கினா்.

தொடா்மழையின் காரணமாக மழைநீா் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் இலக்கியம்பட்டி பகுதியில் சுமாா் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கழிவுநீா் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா். கழிவு நீரை வீடுகளில் இருந்து வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தின் முன் இருந்த மரம் மழையினால் முறிந்து விழுந்தது. இந்த மழையால் தருமபுரி நகரப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படும் நிலையில், புறவழிச்சாலை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. புதன்கிழமை நிலவரப்படி தருமபுரி -22, பாலக்கோடு -10, மாரண்டஅள்ளி -12, பென்னாகரம் - 11, ஒகேனக்கல் -4.6, அரூா் - 38.4, பாப்பிரெட்டிப்பட்டி - 37, மொரப்பூா் -17, நல்லம்பள்ளி - 8 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 16.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com