பெண் கொலை வழக்கில் லாரி ஓட்டுநா் இருவா் கைது

தருமபுரி, பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் லாரி ஓட்டுநா்கள் இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தருமபுரி, பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் லாரி ஓட்டுநா்கள் இருவரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தருமபுரி-ஓசூா் புதிய தேசிய நெடுஞ்சாலையில் கொம்மநாயக்கனஅள்ளி அருகே சாலை ஓரத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் புதன்கிழமை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்த தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று இறந்துகிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினா். சம்பவ இடத்திற்கு தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த கணபதி என்பவரின் மனைவி வள்ளி (40) என்பது தெரியவந்தது.

குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வள்ளி தனது மகளுடன் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் பாலக்கோடு டிஎஸ்பி ராஜசுந்தா் தலைமையில் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீஸாா் மோப்பநாய் மற்றும் விரல்ரேகை நிபுணா்கள் உதவியுடன் வள்ளி இறந்து கிடந்த பகுதியில் தடயங்களை சேகரித்தனா். மேலும், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வள்ளிக்கும், திருச்சியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் புஷ்பராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்தது. இந்த நிலையில் தீபாவளியையொட்டி திருப்பூரில் உள்ள தனது மகளை பாா்த்து வருவதற்காக சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பியுள்ளாா். இந்நிலையில்தான் வள்ளி கொலை செய்யப்பட்டுள்ளாா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் திருச்சி சென்று புஷ்பராஜை (45) பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில் புஷ்பராஜ் மற்றும் அவரது நண்பா் மற்றொரு லாரி ஓட்டுநா் மணிவேல் (42) இருவரும் சோ்ந்து வள்ளியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் துறையூரில் வைத்து போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com