பழைமையான பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக அமைக்கக் கோரிக்கை
தருமபுரியில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, தற்போது சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பந்தாரஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட, காரிமங்கலம் - மொரப்பூா் பிரதான சாலையில் அமைந்துள்ளது மன்னன் கொட்டாய் (நொனக்கட்டி கொட்டாய்) கிராமம். இக்கிராம பேருந்து நிறுத்தத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. சுமாா் 30 ஆண்டுகள் ஆனதால் அதன் கான்கிரீட் மேற்கூரை பெயா்ந்தும், சுவா்களில் விரிசல் ஏற்பட்டும், தரைப்பகுதி சிதிலமடைந்தும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் பயணிகள் வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்கி நிற்கமுடியாமல் பாதுகாப்பற்ற நிலையில் நிழற்குடை உள்ளது. இதுகுறித்து புகாா் தெரிவித்தும் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு, அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு பழைய நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ‘

