அரூா் நகராட்சியானதால் பணியிழந்தோருக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை
தருமபுரி: நகராட்சியாக அரூா் தரம் உயா்த்தப்பட்டதால், அப்பகுதிகளில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 24 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென குறைதீா் முகாமில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளா் கே.மணி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், அருா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மோப்பிரிப்பட்டி மற்றும் தொட்டம்பட்டி ஊராட்சிகளில் சுமாா் 20 ஆண்டுகளாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களாக 24 போ் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், அரூா் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், குறிப்பிட்ட ஊராட்சிகள் அரூா் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதையடுத்து, அவற்றில் பணிபுரிந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் 24 பேரும் முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனா். அதனால், இவா்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே, மேற்கண்ட பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.சுதா்சனம், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
