Enable Javscript for better performance
வாழையில் நூற்புழு மற்றும் பனாமா வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!- Dinamani

சுடச்சுட

  

  வாழையில் நூற்புழு மற்றும் பனாமா வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

  By dn  |   Published on : 18th October 2012 03:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாழைகளில் நூற்புழுக்கள் மற்றும் நோய்கள் அதிகளவு சேதம் விளைவிக்கின்றன. நூற்புழுக்களால் வாழையில் 10 முதல் 50 சதம் வரை மகசூல் குறைப்பு ஏற்படுகின்றன.

  இந்த நோய்களின் அறிகுறிகள் பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும் பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசியர்கள் பூர்ணிமா மற்றும் கி.மணி ஆகியோர் கூறியது:

  தமிழகத்தில் தோட்டக்கால் பூமிகளிலும், மலைச் சரிதல்களிலும் பயிரிடப்படும் வாழைகளிலும் நூற்புழுக்கள் மற்றும் நோய்கள் சேதத்தை விளைவிக்கின்றன. வாழையைத் தாக்கும் நூற்புழுக்களில், வேர் அழுகல் நூற்புழு, வேரைக் குடையும் நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு ஆகிய முக்கியமானவையாகும்.

  3000 புழுக்கள் ஒரு கன்றுக்கு என்ற அளவில் 50 சதம் பாதிப்பு உண்டாக்குகிறது. இப்புழுக்களின் தாக்குதலால் மரங்கள் வளர்ச்சி குன்றியும், இலைகளின் எண்ணிக்கை குறைந்தும் மஞ்சள் நிறமாகியும் காணப்படும். பூ பூத்தல் மற்றும் குலை தள்ளுவதில் தாமதம் காணப்படும். பழங்களின் எண்ணிக்கை குறைந்து அதன் அளவு சிறியதாகி விடுகிறது.

  வேர்கள் கருமை அல்லது சிவப்பு நிற அழுகலோடும், வேர் முடிச்சுக்களோடும் காணப்படும். வேர்கள் அழுகிவிடுவதால் மரங்கள் நிலத்தில் வேர் ஊன்றி நிற்க முடியாமல் காற்றில் சாய்ந்து விடும். இத்தகைய சேதத்தினால் இறுதியில் வாழையின் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

  வேரிலும், கிழங்குகளிலும் காயங்கள் ஏற்பட்டு எளிதில் உள்புகுவதால், பனாமா வாடல் நோய் தாக்க நேரிடும். வாடல் நோயின் அறிகுறி முதலில் முதிர்ந்த இலைகளில் காணலாம். இந்த நோய் தாக்கப்பட்ட மரங்களில் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறி வாடி விடும். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து விடும். வாழை மரத்தினை இரண்டாக வெட்டிப் பார்த்தால் பழுப்பு மற்றும் சிவப்பு கோடுகளுடன் அழுகிய  மீன் வாடை வீடும். வாழையின் அடித்தண்டு பகுதி வெடித்தும் காணப்படும்.

  கட்டுப்படுத்தும் வழிகள்: நூற்புழு மற்றும் நோய் பாதிக்கப்பட்ட கன்றுகளை நடுவதால் வாழையில் நூற்புழுக்கள் மற்றும நோய் பரவுகின்றன. இதை தடுப்பதற்கு, கிழங்குகளில் உள்ள நூற்புழுக்களை அகற்றுவதே மிக முக்கியம். நூர்புழுக்க்ள் உள்ள கிழங்குகள் கருமை அல்லது சிவப்பு நிற அழுகலோடு காணப்படும். இதில் பல ஆயிரக்கணக்கான நூற்புழுக்கள் தங்கியிருக்கும். இந்த அழுகள் சுமார் 2 முதல் 3 செ.மீ ஆழம் வரை கிழங்குகளில் பரவியிருக்கும், இந்த அழுகிய பகுதிகளை சீவி, கிழங்குகள் வெள்ளை நிறமாக தோன்றும்படி செய்வதன் மூலம் பெரும்பாலான நூற்புழுக்கள் அகற்ற முடியும்.

  சீவிய கிழங்குகள் களிமண் குழம்பில் (மண் 1, நீர் 3) அல்லது சாணி கரைசலில் நனைத்து புயூரடான் கருணை மருந்தினை 40 கிராம் அளவு தூவி நட வேண்டும். இம்முறை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்ததாகும். இதன் சிறப்பு முத்தடிப்பு, அதாவது நூற்புழு, கூன்வண்டு, அசுவினி இழை மூன்றிலிருந்தும் 3 முதல் 4 மாதம் வாழையைக் காப்பாற்றலாம்.

  எஞ்சிய நூற்புழுக்களை அழிக்க மானோகுரோட்டோபாஸ் 36 சதம் பூச்சி கொல்லி கரைசலில் (1.5மி,லி 1லிட்டர் நீர்) நனைத்து நடலாம்.

  வாழையின் பனாமா வாடல் நோயை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் தாக்கிய வாழையை அப்புறப்படுத்தி குழியில் சுண்ணாம்பு போட வேண்டும்.

  வாழை நடும் போது கார்பன்டாசிம் 1 கிராம் 1 லிட்டர் நீரில் நனைத்து பின்பு மாதம் இரு முறை மேற்கூறிய கரைசலை வாழையை சுற்றி ஊற்றுவதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். மேலும், நுண்ணியிர் கொல்லியான சுடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி இட்டும் கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து வாழையை பயிரிடாமல், வாழைக்குப்பின் நெல் பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை தவிர்க்கலாம். 45 நாள்களில் பசுந்தாள் பயிரான சணப்பை பயிரை ஊடுபயிராக இட்டு பூப்பதற்கு முன் வேருடன் பிடுங்கி மண்ணில் இட்டு கலக்காலம். மேலும் வாழை நடும் போது கன்றுக்கு சுமார் 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை இடுவதன் மூலம் மண்ணின் தரத்தை உயர்த்துடன் நூற்புழுவையும் கட்டுப்படுத்த முடியும். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி வாழையை நோயிலிருந்து தவிர்த்து நல்ல மகசூலை பெறலாம்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai