Enable Javscript for better performance
ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் இளவரசன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் தடை விதித்திருப்பது ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் சனிக்கிழமை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இளவரசனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தருமபுரி ஆட்சியர் 13-ஆம் தேதி மாலைக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், நான் இளவரசனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி மறுத்து, தடையுத்தரவு பிறப்பித்து தருமபுரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த முடிவு ஜனநாயக விரோத, தனி மனித உரிமையைப் பாதிக்கும் செயலாகும்.

    இந்த மனு குறித்து விசாரிக்கும் போது நீதிமன்றத்தில், தருமபுரிக்கு நான் தனியாகச் செல்வதற்காவது அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், எங்கள் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.

    நான் தனியாக தருமபுரிக்கு செல்வதால் அங்கு கலவரம் ஏற்படும் எனக் கூறுவது வேடிக்கையானது. கடந்த ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு அங்கு நான் ஒருமுறை மட்டுமே சென்றேன். அதற்குப் பிறகு, கடந்த 8 மாதங்களாக என்னை தருமபுரிக்குள் அனுமதிக்கவில்லை.

    இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்பதைக் காட்ட காவல் துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளையும் அவர்களால் காட்ட முடியவில்லை. அதற்கு இணையாக அவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளன. சட்டம் சார்ந்த மருத்துவர்கள் இளவரசனின் மரணம் தற்கொலைதான் என்பதைக் கூற முடியாத நிலைதான் உள்ளது.

     இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்பது முடிவாகாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.

    எனவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்திய பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில் அல்லது அவர் இடம்பெறும் சட்டம் சார்ந்த மருத்துவர்களும் அடங்கிய புலனாய்வுக் குழுவை தமிழக அரசு நியமித்து, இளவரசன் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.    வழக்கமாக பிரேத பரிசோதனை காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இளவரசனின் உடல் பிரேத பரிசோதனையை காலை 6 மணிக்கு அவசர, அவரசமாக ஒப்புதல் கடிதம் பெற்று, காலை 7 மணிக்குள் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

     முதல் பிரேத பரிசோதனையில் வயிற்றில் வாசனையற்ற திரவம் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், வேதியியல் பரிசோதனையில் வயிற்றில் ஆல்கஹால் இருந்ததாகக் கூறப்பட்ட மர்மம் என்ன? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் இளவரசனின் மரணத்தில் எழுந்துள்ளன என்றார் திருமாவளவன்.

     தடை ஆணை அளிப்பு: இதனிடையில், திருமாவளவன் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த தமிழ்நாடு ஹோட்டலுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொது மேலாளர் மகேஸ்வரன், டிஎஸ்பி ம.சந்தானபாண்டியன், வட்டாட்சியர் வள்ளி ஆகியோர், தருமபுரிக்குள் நுழைய அந்த மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் பிறப்பித்த தடையாணையை திருமாவளவனிடம் வழங்கினர். இந்த ஆணையை அவர் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து, அவர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai