Enable Javscript for better performance
காவேரிப்பட்டணத்தில் பொதுமக்களிடம் அமைச்சர் கே.பி.முனுசாமி குறைகேட்பு- Dinamani

சுடச்சுட

    

    காவேரிப்பட்டணத்தில் பொதுமக்களிடம் அமைச்சர் கே.பி.முனுசாமி குறைகேட்பு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 14th July 2013 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நேரடியாகச் சென்று குறைகளைக் கேட்டறிந்தார்.

    காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 6 முதல் 10-ஆவது வார்டு வரையும், 15 -ஆவது வார்டிலும் பொதுமக்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டு, மனுக்களைப் பெற்றார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பன்னீர்செல்வம் தெருவில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து சின்டெக் டேங்க் அமைத்து குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, சுபாஷ் சந்திரபோஸ் தெரு மற்றும் ஜின்னா தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து புதிய கல்வெட்டுகள் அமைக்கவும், ஆழ்துளைக் கிணறு, சின்டெக் டேங்க் அமைத்து குடிநீர் வழங்கவும், பழுதான தெருவிளக்குகளைச் சீரமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், முதியோர் உதவித்தொகை மற்றும் வீட்டுமனைப் பட்டாக்கள் கேட்டு பொதுமக்களிடமிருந்து 33 மனுக்களைப் பெற்ற அமைச்சர், தகுதியின் அடிப்படையில் முதியோர் உதவித்தொகை வழங்க வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து, கோவிந்தசெட்டித் தெருவில் ரூ. 12 லட்சத்தில் புதிதாகக் கட்டப்படும் 1 லட்சம் லிட்டர் கொள்ளவு உள்ள மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி, புலாலர் தெருவில் ரூ.20 லட்சத்தில் புதிதாகக் கட்டப்படும் 2 லட்சம் லிட்டர் கொள்ளவு உள்ள மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி, அண்ணா மண்டபத்தில் ரூ.45 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் கட்டடங்கள், ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகளைத் தரமானதாகவும், விரைவாகவும் முடிக்கவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.அசோக்குமார், பேரூராட்சித் தலைவர் வாசுதேவன், ஒன்றிய குழுத் தலைவர்கள் ஜமுனா கிருஷ்ணன், கோவிந்தராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் (பொ) சுப்பிரமணி ராஜி, செயல் அலுவலர் கணேஷ், உதவி பொறியாளர் ராஜேந்திரன், வட்டாட்சியர் வள்ளி, வருவாய் ஆய்வாளர் இளங்கோ, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் பன்னீர்செல்வம், மின்சார வாரிய உதவிப் செயற்பொறியாளர் எத்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai