Enable Javscript for better performance
தருமபுரியில் இளவரசன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடை விதித்திருப்பது ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் இளவரசன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடை விதித்திருப்பது ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

    By கிருஷ்ணகிரி  |   Published on : 14th July 2013 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் இளவரசன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடை விதித்திருப்பது ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் சனிக்கிழமை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இளவரசனின் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்து தர்மபுரி ஆட்சியர் வரும் 13-ஆம் தேதி மாலைக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் நான் இளவரசனின் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி மறுத்து தடையுத்தரவு பிறப்பித்து தர்மபுரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த முடிவு ஜனநாயக விரோத, தனிமனித உரிமையை பாதிக்கும் செயலாகும்.

     இந்த மனு குறித்து விசாரிக்கும் போது நீதிமன்றத்தில், தர்மபுரிக்கு நான் தனி ஒருவனாக செல்வதற்காவது அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், எங்கள் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. நான் தனியாக தர்மபுரிக்கு செல்வதால் அங்கு கலவரம் ஏற்படும் என கூறுவது வேடிக்கையானது. நவம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு அங்கு நான் ஒருமுறை மட்டுமே சென்றேன். அதற்கு பிறகு கடந்த 8 மாதங்களாக என்னை தர்மபுரிக்குள் அனுமதிக்கவில்லை.

     இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை காட்ட காவல்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளையும் அவர்களால் காட்ட முடியவில்லை. அதற்கு இணையாக அவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளது. சட்டம் சார்ந்த மருத்துவர்கள் இளவரசனின் மரணம் தற்கொலைதான் என்பதை கூற முடியாத நிலைதான் உள்ளது.

     இளவரசனின் உடற்கூறு வீடியோ காட்சிகளை பார்த்த மருத்துவர்களில் ஒருவர் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை என கூறி உள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, இளவரசனின் உடலை பார்வையிட்ட சம்பத்குமார், தங்கராஜ் ஆகியோரில் ஒருவர் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். எனவே, மறுபிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்பது முடிவாகாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.

    எனவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்திய பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில் அல்லது அவர் இடம்பெறும் சட்டம் சார்ந்த மருத்துவர்களும் அடங்கிய புலனாய்வுக் குழுவை தமிழக அரசு நியமித்து, இளவரசன் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். வழக்கமாக பிரேதபரிசோதனை காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை காலை 6 மணிக்கு அவசர, அவரசமாக ஒப்புதல் கடிதம் பெற்று காலை 7 மணிக்குள் செய்ய வேண்டிய அவசியம் என்ன முதல் பிரேத பரிசோதனையில் வயிற்றில் வாசனையற்ற திரவம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், வேதியியல் பரிசோதனையில் வயிற்றில் ஆல்கஹால் இருந்ததாக கூறப்பட்ட மர்மம் என்ன இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் இளவரசனின் மரணத்தில் எழுந்துள்ளது. இளவசரனின் மரணம் குறித்த விசாரணையில் காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இளவரசனின் இறுதி சடங்கில் திவ்யா பங்கேற்க மறுப்பதாக வெளியான தகவல், அவர் இன்னும் சதிகார கும்பலின் பிடியில்தான் உள்ளார் என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு அமைத்துள்ள நீதி விசாரணை குழு, ஜூன் 4-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை திவ்யாவும், அவரது தாயார் தேன்மொழியும் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார்கள் இளவரசனுடன் இனிமேல் வாழமாட்டேன் என திவ்யா கூறும்படி அவரை நிர்பந்தித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

     இளவரசனின் இறுதி சடங்கில் பங்கேற்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தர்மபுரியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதியாகும். தடையை மீறி தர்மபுரிக்குள் நுழைவதும், இறுதி சடங்கில் பங்கேற்பதும் அரசியல் முடிவு. எனவே, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி ஞாயிற்றுக்கிழமை காலை முடிவை அறிவிப்பேன். சமூக நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார் திருமாவளவன்.

     பேட்டியின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன், மாநில வணிகரணி துணை செயலாளர் கனியமுதன், தமிழ்மணி, மாவட்ட துணை செயலாளர்கள் மூர்த்தி, குபேந்திரன், செய்தி தொடர்பாளர் சங்கதமிழ்சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தடை ஆணை அளிப்பு: திருமாவளவன் தங்கியிருந்த கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலுக்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மேலாளர் மகேஸ்வரன், டிஎஸ்பி ம.சந்தானபாண்டியன், வட்டாட்சியர் வள்ளி ஆகியோர், தர்மபுரிக்குள் நுழைய அந்த மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் பிறப்பித்து தடையாணையை திருமாவளவனிடம் வழங்கினர். இந்த ஆணையை திருமாவளவன் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். திருமாவளவன் தங்கியியுள்ள கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி ம.சந்தானபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai