Enable Javscript for better performance
தென்னக நதிகளை இணைக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    தென்னக நதிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வருகிற 31-ஆம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது கண்டிக்கத் தக்கது.

    தென்னக நதிகளை இணைப்பதன் மூலம் புதிதாக 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சுமார் 50 ஆயிரம் நகரங்களின் குடிநீர் பிரச்னை தீரும்.

    தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

    பாதுகாப்புத் துறை, தொலைத் தொடர்பு, அணுசக்தி, எரிசக்தி, கடன் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் 100 சத அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது நாட்டின் அடிப்படைக் கொள்கைக்கு விரோதமானது.

    ஒசூரில் இருந்து சென்னைக்கு ஜோலார்ப்பேட்டை வழியாக ரயில் பாதை அமைத்து, சென்னைக்கு ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார் தா.பாண்டியன்.

    பேட்டியின் போது, தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சி.நஞ்சப்பன், அருர் தொகுதி முன்னாள் எமஎல்ஏ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai