Enable Javscript for better performance
பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 22nd July 2013 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள பாரூர் பெரிய ஏரியிலிருந்து முதல் போகப் பாசனத்திற்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம் தண்ணீரைத் திறந்து வைத்துப் பேசியது: பாரூர் பெரிய ஏரியில் தற்போது உள்ள நீர் அளவைக் கொண்டும், பருவ மழையினால் வரும் நீர்வரத்தை எதிர்நோக்கியும், கிருஷ்ணகிரி அணையிலுள்ள பற்று நீரைக் கொண்டும், பாரூர் பெரிய ஏரியின் கிழக்குப் பிரதானக் கால்வாய் மூலம் நொடிக்கு 50 கன அடி வீதமும், மேற்குப் பிரதானக் கால்வாய் மூலம் நொடிக்கு 20 கன அடி வீதமும் இரு கால்வாய்களிலும் சேர்த்து மொத்தம் 70 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்தத் தண்ணீர் 150 நாள்களுக்கு முறைப்பாசனம் வைத்து, மூன்று நாள்கள் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டும், நான்கு நாள்கள் மதகை மூடிவைத்தும் விடப்படும்.

    இந்தத் தண்ணீர் மூலம் பாரூர், அரசம்பட்டி, பெண்டரஹள்ளி, கீழ்குப்பம், புலியூர், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி, விருப்பம்பட்டி ஆகிய 9 கிராமப் பகுதிகளில் உள்ள 4,729.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற உள்ளது. விவசாயிகள் இந்தத் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், கே.இ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.அசோக்குமார், கோட்டாட்சியர் மனோகரன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஜெ.ஜெகந்நாதன், உதவிச் செயற்பொறியாளர் குமார், உதவிப் பொறியாளர் ரத்தினவேல், ஒன்றியக் குழுத் தலைவர் ஜமுனாகிருஷ்ணன், வட்டாட்சியர் நடராஜன் மற்றும் விவசாயிகள், பாசனச் சங்கத் தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai